அப்ரா அன்சார்
லாகூரில் உள்ள கடாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இரவு மின்னொளியில் ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, கடைசி ஓவர்கள் வரை விறுவிறுப்பாக அமைந்தது.
326 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் பகர் ஸமான் வலுச்சேர்த்தார்.
2017ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பகர் ஸமான், இம்முறையும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 பந்துகளில் சதமடித்ததுடன், மொத்தமாக 127 ஓட்டங்களைக் குவித்தார்.
எனினும், அவர் ஆட்டமிழந்த பின்னரும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கான போராட்டம் தொடர்ந்தது.
அந்தச் சவாலை இளம் வீரர்களான 21 வயதுடைய அராஃபத் மின்ஹாஸ் மற்றும் 24 வயதுடைய ஹசன் நவாஸ் ஆகியோர் சிறப்பாகக் கையாண்டனர்.
இருவரும் இணைந்து 94 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
அராஃபத் மின்ஹாஸ் 31 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் அடங்கின.
வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் மின்ஹாஸ் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
எனினும், இறுதியில் ஷஹீன் ஷா அப்ரிடி சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்தத் தொடரில் அராஃபத் மின்ஹாஸ் தனது திறமையை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
மறுபுறம், இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் அபாரமாகச் செயற்பட்டு 131 ஓட்டங்களைக் குவித்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த அவர், இதற்கு முன்னர் பெற்றிருந்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையையும் இருமடங்குக்கும் அதிகமாக உயர்த்தினார்.
தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்களைப் பதிவு செய்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கமிந்து மெண்டிஸ், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நீண்டகாலமாகச் சதம் ஒன்றைப் பெறுவதற்காகக் காத்திருந்தார்.
இந்நிலையில், தனது அறிமுக ஒருநாள் போட்டியிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவருக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். இருவரும் இணைந்து இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்டுக்காக 87 ஓட்டங்களைப் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸுடன் இணைந்த பவன் ரத்நாயக்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களுக்குள் 146 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பவன் ரத்நாயக்க, இப்போட்டியில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் முத்தரப்பு தொடரில் அவர் பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கை 427 ஆக உயர்ந்ததுடன், அவரது துடுப்பாட்ட சராசரி 106.75 ஆகப் பதிவானது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு சதங்களைப் பதிவு செய்திருந்த அவர், தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இலங்கை அணி 41 ஓவர்கள் நிறைவில் 255 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, அணித்தலைவர் தசுன் ஷானக்கவின் அதிரடி ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
எனினும், ஷஹீன் ஷா அப்ரிடி இலங்கை அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
கமிந்து மெண்டிஸ் மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். மறுபுறம் ஹரிஸ் ரவூப் இறுதிக்கட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் கடைசி ஒன்பது ஓவர்களில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் பாபர் அஸாமிடம் இருந்து சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டம் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அவர் ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறி வருகிறார். இப்போட்டியிலும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஒன்பது இன்னிங்ஸ்களில் அரைச்சதம் கூடப் பெற முடியாத நிலையை அவர் எதிர்கொண்டுள்ளார்.
தில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சில் மாஸ் சதகத் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, 14 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது.
இதன்போது பகர் ஸமானுடன் இணைந்த சாத் பெய்க் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார்.
தனது 20ஆவது பிறந்தநாளுக்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில், சாத் பெய்க் 52 பந்துகளில் தனது முதலாவது சர்வதேச அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.
அவர் 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் பகர் ஸமான் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். எனினும், இலங்கை அணியின் களத்தடுப்பு வாய்ப்புகளைத் தவறவிட்டது அவருக்குச் சாதகமாக அமைந்தது.
மதுஷங்கவின் பந்துவீச்சில் ஆறு ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பகர் ஸமான் வழங்கிய பிடியெடுப்பு வாய்ப்பு தவறவிடப்பட்டது.
அதேபோன்று, 69 மற்றும் 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் மஹீஷ் தீக்ஷனவினால் வழங்கப்பட்ட பிடியெடுப்பு வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.
இருப்பினும், இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்.
மதுஷங்கவின் வேகப்பந்துவீச்சில் பகர் ஸமான் 127 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மேலும் 106 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
தொடர்ந்து துனித் வெல்லாலகேயின் சுழற்பந்துவீச்சில் சல்மான் ஆகாவும் ஆட்டமிழந்தார்.
இதனால் போட்டி மீண்டும் இலங்கை அணியின் பக்கம் திரும்பியது. பத்து ஓவர்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அணியால் எல்லைக்கோட்டைத் தாண்டி பந்தைச் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், அராஃபத் மின்ஹாஸ் தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அந்த ஓட்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 46 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஷானக்க வீசிய ஓவரில் 15 ஓட்டங்கள் பெறப்பட்டன.
இதன் மூலம் போட்டியின் போக்கு முழுமையாகப் பாகிஸ்தான் அணியின் பக்கம் திரும்பியது.
மின்ஹாஸின் அதிரடியும், இறுதியில் ஷஹீன் அப்ரிடியின் சிக்ஸரும் பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தின.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகப் பகர் ஸமான் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரின் நாயகனாக அராஃபத் மின்ஹாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்மூலம் இலங்கை அணியை மூன்று விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது.









