ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரையும், பொறியியலாளரான அவரது மகனையும் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து உடல் மற்றும் உள ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் சரீரப் பிணையில் விடுவிக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலுள்ள கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட ஐவர், திஹகொட பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (22) கைது செய்யப்பட்டனர்.
கிரிந்த நகரில் வீதியொன்றை அண்மித்த பகுதியில் மதில் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையின் பொறியியலாளரான மகன் கார் ஒன்றைக் கொள்வனவு செய்து வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து, அயல் காணியில் வசிக்கும் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குறித்த காரை வெளியே எடுக்க முடியாத வகையில் தடையாகச் சுவரின் ஒரு பகுதியை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த உத்தியோகத்தர் சில நாட்கள் விடுமுறை பெற்று இந்தச் சுவர் கட்டுமானத்தை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, சுவரின் சட்டபூர்வத் தன்மை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்கும் அழைப்பதாகக் கூறி, பிரதேச சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் அவரது மகனை நேற்று பிரதேச சபைக்கு அழைத்துள்ளார்.
இதன்போது, அவர்கள் இருவரையும் பிரதேச சபையின் அறையொன்றுக்குள் பூட்டி வைத்து உடல் மற்றும் உள ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இருவரும் திஹகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து, சட்டத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்கள் ஐவரையும் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.








