புதிய களனிப் பாலம் மற்றும் துறைமுக அணுகல் மேம்பால அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் காரணமாக, இங்குருகட இடைமாறலின் (Ingurukade Interchange) உள்நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (23) முதல் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை, குறிப்பிட்ட நேரங்களில் குறித்த பாதைகள் தற்காலிகமாக மூடப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க மற்றும் கண்டி திசைகளிலிருந்து இங்குருகட சந்தி அல்லது கொழும்புத் துறைமுகம் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், பேலியகொட அல்லது ஒருகொடவத்த வெளியேறும் வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, ஒருகொடவத்த திசையிலிருந்து கொழும்புத் துறைமுகம் அல்லது இங்குருகட சந்தி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், புதிய களனிப் பாலப் பகுதியில் அமைந்துள்ள வீதியின் ஊடாகப் பேலியகொட நுழைவாயிலைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொரளை திசை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் புதிய களனிப் பாலப் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட வீதியைப் பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.








