வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்கள் நிலவிய காலப்பகுதியில், அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றி, அப்பிரதேசங்களில் வாழ்கின்ற குடும்பங்களின் சமூக வாழ்வை மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், அக்குடும்பங்களை மீள்குடியேற்றல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான காணிகளை விடுவித்துக் கொள்ளல் போன்றன மிதிவெடியகற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.
அதற்கமைய, 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் மிதிவெடிகளை அகற்றும் மனிதாபிமான வேலைத்திட்டத்தின் பணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடியகற்றும் அலகின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 2026.01.01 ஆம் திகதியாகும் போது மேலும் 21.3 சதுர கிலோமீற்றர்கள் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
தற்போது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடியகற்றும் அலகுடன் இணைந்து மிதிவெடியகற்றும் பணிகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களாக, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களான Mines Advisory Group மற்றும் The Halo Trust உம் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களான Delvon Assistance for Social Harmony மற்றும் Skavita Humanitarian Assistance and Relief Project போன்ற நிறுவனங்கள் பணியாற்றுகின்றன.
மிதிவெடியகற்றும் பணிகளை மேற்கொள்ளும் போது மிதிவெடியகற்றும் நிறுவனங்களுடன் மிதிவெடியகற்றும் தேசிய நிலையத்துடன் வருடாந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.
2026.01.01 ஆம் திகதி தொடக்கம் 2026.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுடன் இப்பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 04 இல் கையொப்பமிடுவதற்கு வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








