குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, அசல் விலைக் குறியீடுகளை மாற்றியமைத்தமை மற்றும் காலாவதியான பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பான தனித்தனி வழக்குகளில், பிரபல சூப்பர் மார்க்கெட் சங்கிலியின் இரண்டு கிளைகளுக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் மொத்தம் 4 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பண்டாரகம மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் J.K. Marketing Services (Pvt) Ltd நிறுவனத்துக்குச் சொந்தமான கிளைகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் களுத்துறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பண்டாரகம கிளையில் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அதிகபட்ச சில்லறை விலை 590 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்ட 10 முட்டைகள் அடங்கிய பொதியொன்று 615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
அத்துடன், காலாவதியான குளிர்பானங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இந்த வழக்கு செப்டம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை, மத்துகம கிளையில் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 100 கிராம் எடையுடைய 5 இனிப்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் பொதிகளில் அசல் விலைக் குறியீடுகள் அழிக்கப்பட்டு மாற்றப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
Direction No. 85 மற்றும் சட்டத்தின் 10(4)ஆம் பிரிவை மீறியமை தொடர்பான இந்த வழக்கு செப்டம்பர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நிறுவனத்தினர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இரு வழக்குகளிலும் தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த அபராதத் தொகை 4 இலட்சம் ரூபாயாகும்.
பொருட்களை கொள்வனவு செய்யும்போது குறிக்கப்பட்ட விலையும் பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலையும் ஒன்றாக உள்ளதா என்பதை சரிபார்க்குமாறும், அசல் விலைக் குறியீடுகள் மாற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறும், உணவு மற்றும் பானங்களின் காலாவதி திகதியை பரிசோதிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தெரிவிக்க முடியும்.








