நாட்டின் பல பிரதான ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள போதிலும், தற்போது எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் பல பிரதான ஆற்றுப்படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, கின் கங்கையின் கீழ்ப்பகுதியில் பத்தேகம அருகே சுமார் 125 மி.மீ. மழைவீழ்ச்சியும், களு கங்கையின் மேற்பகுதியில் இரத்தினபுரியில் சுமார் 75 மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
களு கங்கையின் கீழ்ப்பகுதியில் கெஸ்பேவ அருகே சுமார் 100 மி.மீ. மழைவீழ்ச்சியும், கொழும்பை அண்மித்த பகுதிகளில் சுமார் 100 மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
மகாவலி கங்கையின் மேற்பகுதியான பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளில் 50 முதல் 75 மி.மீ. வரையிலும், அம்பாறை கல்ஓயா ஆற்றுப்படுகையை அண்மித்த பகுதிகளில் சுமார் 100 மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 மி.மீ. மழைவீழ்ச்சியும், அனுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் 40 மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், பெரும்பாலான ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலை தற்போது காணப்படவில்லை என நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரவலயத்தில் உள்ள கின் கங்கை, நில்வலா கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ள போதிலும், அவை இன்னும் வெள்ள மட்டத்தை எட்டவில்லை.
இருப்பினும், குறித்த பகுதிகளில் மேலும் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், குறுகிய காலத்தில் அதிகளவு மழை பெய்து வருவதால், தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
Forwar








