இலங்கை மற்றும் மாலைதீவு கலைஞர்களின் கலைப் படைப்புகளை ஒன்றிணைக்கும் ‘கொழும்பு–மாலே’ சமகால ஓவியக் கண்காட்சி, மாலைதீவின் தேசிய கலைக்கூடத்தில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானது.
எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த முன்னணி கலைஞர்களின் பல்வேறு பாணிகள் மற்றும் கருப்பொருள்களை பிரதிபலிக்கும் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை கலைஞர்களான சரத் குணசிறி பெரேரா, டி.பி.ஜி. அமரஜீவ, கே.டி. லக்ஷ்மன் மற்றும் சாமிந்த கமகே ஆகியோரின் படைப்புகளுடன், மாலைதீவு கலைஞர்களான அப்ஸல் ஷாபியு, அஹ்மத் அனில், அஹ்மத் அஸ்மி மற்றும் ஹூசைன் அலி மனிக் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
மாலைதீவு கலைஞர் ஹூசைன் அலி மனிக் தலைமையில், இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் மாலைதீவு தேசிய கலைக்கூடத்தின் ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் இரு நாடுகளின் கலைஞர்கள், இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் கலை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக இலங்கையின் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மொஹமட் ரிஸ்வி ஹசன் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘கொழும்பு–மாலே’ கண்காட்சியை இலங்கையிலும் நடத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.








