ரயில்வே திணைக்களத்தின் தீர்க்கப்படாத நிர்வாகப் பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை இன்று(16) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதனிடையே, வேலைநிறுத்தம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னரே நீண்ட தூர ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கிய இரவு தபால் ரயில் மற்றும் மாலை நேர விரைவு ரயில் சேவைகள் உள்ளிட்ட பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில ரயில்கள் இலக்கை அடைவதற்கு முன்னரே இடைநிறுத்தப்பட்டதால், பயணிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் உரிய 14 நாட்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்ட போதிலும், தங்களது கோரிக்கைகளுக்கு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் தீர்வு வழங்கவில்லை என லோகோமோட்டிவ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரயில்வே பொது முகாமையாளரின் நிர்வாகம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாளாந்தம் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை சுமார் 450 இலிருந்து 184 ஆக குறைந்துள்ளதாக தொழிற்சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவகால ரயில் பயணச்சீட்டுகள் வழங்குவதில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலும் தொழிற்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் பயணிகள் மேலும் பாதிக்கப்பட நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.







