அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து இருக்கைகளிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
வாகன உற்பத்தியாளர்களால் ஆசன பட்டி பொருத்தப்படாத இருக்கைகளுக்கு அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில், 2026 ஜூன் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2493/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில், 2011 ஆகஸ்ட் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட 1717/14ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக வீதிகள்) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 2025 செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
இதற்காக ஆரம்பத்தில் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கால அவகாசம் 2025 டிசம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த கால அவகாசம் 2026 மார்ச் 20 முதல் ஜூன் 19ஆம் திகதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டிருந்தது.








