தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தவெக தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (09) சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. மற்றும் சிந்தனைச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதன்போது தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டதுடன், கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கூட்டணியை அமைப்பது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1ஆம் திகதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.









