பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை நீக்குவதற்கான ‘பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம்’ இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.
இதன்படி, புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வருவதன் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த பதவியும் இரத்துச் செய்யப்படும்.
மேலும், சட்டம் நடைமுறைக்கு வந்ததும், பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்துக்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் மாற்றப்படும்.









