நுகர்வோர் ஒருவருக்கு காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றம் ரூ.2 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் (CAA) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட விசாரணையில், 2026 ஜூலை 15ஆம் திகதி காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் தேயிலைப் பொதியொன்று ரூ.1,000க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2014 ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 1875/38ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பணிப்புரை இலக்கம் 52ஐ மீறியமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தப் பணிப்புரையின் கீழ், விற்பனைக்கு பொருத்தமற்றவை, காலாவதியானவை அல்லது மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேமித்து வைப்பது அல்லது காட்சிப்படுத்துவது உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், விநியோகிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.









