சென்னையில் உலகத் தரத்திலான ஒலிம்பிக் நகரம் மற்றும் பிரத்யேக மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை அமைப்பதற்கான திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை உரையாற்றிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னையில் உலகத் தரத்திலான தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந்த ஒலிம்பிக் நகரில், சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்குகள், நவீன விளையாட்டு உபகரணங்கள், உயர் செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவத்திற்கான பிரத்யேக மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதனுடன், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிடங்கள் உள்ளிட்ட நவீன உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்வதற்குத் தேவையான உயர்தர பயிற்சி மற்றும் ஆதரவு வசதிகளை ஒரே இடத்தில் வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
“ஒலிம்பிக் தரத்திலான உலகத் தரமான உட்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு வசதியுடன் கூடிய பயிற்சி அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் சென்னையில் சர்வதேச போட்டிகளை நடத்தவும், ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கவும் முடியும்” என முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் பிரத்யேக மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்பட்டு, ஃபார்முலா 1 உள்ளிட்ட மோட்டார் பந்தயங்களை நடத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
மோட்டார் ஸ்போர்ட்ஸில் திறமை கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கும் வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
உலகத் தரத்திலான மோட்டார் வாகன பந்தய அரங்குகள் அமைக்கப்படுவதன் மூலம் சுற்றுலாத்துறை, சிறப்பு வாகன உற்பத்தித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் ஃபார்முலா 1 பந்தயத்தை மீண்டும் நடத்தும் நோக்கில், 2028ஆம் ஆண்டுக்குள் ஃபார்முலா 1 போட்டியை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான பணிக்குழுவொன்றை அமைத்துள்ளது. குறித்த குழு நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணித்து, அதுகுறித்த அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.









