இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டசபை இன்று (31) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த 5ஆம் திகதி 2026–2027ஆம் ஆண்டுக்கான பொது வரவு செலவுத் திட்டமும், 6ஆம் திகதி வேளாண் வரவு செலவுத் திட்டமும் தாக்கல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 7, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றதுடன், 12ஆம் திகதி நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலுரைகளை வழங்கினர்.
இதனையடுத்து, கடந்த 17ஆம் திகதி முதல் துறைவாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 32 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது.
முதலில் கேள்வி நேரம் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளதுடன், விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக தங்களது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடவுள்ளனர்.









