இலங்கை முதலாவது ICC மகளிர் சாம்பியன்ஸ் டிரோபி தொடரை நடத்தும் உரிமையை இழந்தமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
இந்தத் தொடரை நடத்தும் வாய்ப்பை இழந்தது வெறுமனே ஒரு சர்வதேச போட்டியை இழந்த விடயம் அல்ல எனத் தெரிவித்த அவர், இலங்கை கிரிக்கெட்டுக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்புகள், வருமானம் மற்றும் சர்வதேச வெளிப்பாடு ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள், நிர்வாகிகள் மற்றும் நிறுவனங்கள் விளையாட்டை விட தங்களது அகங்காரம், அதிகாரம் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, பாதிக்கப்படுவது அவர்களல்ல; விளையாட்டு வீரர்கள்தான்” என நாமல் ராஜபக்ஷ தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
விளையாட்டை வலுப்படுத்தவும் வீரர்களைப் பாதுகாக்கவும் அரசியல் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், கட்டுப்பாடு அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
“அகங்காரங்களை ஒதுக்கி வையுங்கள். இலங்கைக்கு முதலிடம் கொடுங்கள். எமது விளையாட்டு வீரர்களையும், எமது கிரிக்கெட்டையும் பாதுகாப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக இலங்கை விளையாட்டு வீரர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை இழக்க முடியாது எனவும், “இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட்டுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்” எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில், இலங்கை மகளிர் சாம்பியன்ஸ் டிரோபி தொடரை நடத்தும் உரிமையை இழந்தமை தொடர்பில் எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில் நாமல் ராஜபக்ஷவின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.








