முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில்கூட இடம்பெறாத அளவிலான சர்வாதிகார ஆட்சியை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களின் அனுசாசனைகளைக்கூட ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு தற்போதைய அரசாங்கம் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தலையில் நேற்று (30) நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகம் தற்போது உச்சக்கட்ட சவாலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்த திலித் ஜயவீர, அரசியல் அதிகாரம் குடும்ப உரிமையாகக் கருதப்படக்கூடாது என்றும், அரசியல் தலைமைத்துவத்துக்கான உரிமை மக்களின் ஆதரவின் மூலமே கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானாலும், மனசாட்சிக்கு உண்மையாக செயற்படாத அரசியலால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்கும் நோக்கிலேயே தமது அரசியல் முன்னெடுக்கப்படுவதாகவும், நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.








