பல்கலைக்கழக மாணவர்கள் 16,000 பேருக்கு விடுதி வசதிகளை வழங்கும் வகையில் புதிய விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (9) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாணவர் விடுதி வசதிகள் தொடர்பான விரிவான தேசிய கொள்கையொன்றும் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு விடுதி மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) 376 மில்லியன் ரூபாவையும், 2026ஆம் ஆண்டுக்காக 453 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டு விடுதி மறுசீரமைப்புக்காக 400 மில்லியன் ரூபாவையும், புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது. இந்த அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் உள்நாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்காக எந்தவொரு கடனும் பெறப்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அதேவேளை, வெளிநாட்டு கடன் நிதியுதவியின் கீழும் விடுதி நிர்மாணப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெயம்ப நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், சவுதி அபிவிருத்தி கடன் மூலம் நிர்மாணிக்கப்படும் விடுதிகளுக்காக 2026ஆம் ஆண்டு 321 மில்லியன் ரூபாவும், சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான விடுதி நிர்மாணத்திற்காக 331 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெயம்ப திட்டத்தின் கீழ் விடுதி மறுசீரமைப்புப் பணிகளுக்காக 10.46 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டு மொத்தமாக 466 மில்லியன் ரூபாவும், 2026ஆம் ஆண்டு 662.46 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
2025, 2026 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் மொத்தமாக 55 புதிய மாணவர் விடுதிகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, விடுதி வசதிகளுக்கான பற்றாக்குறை அதிகமாக உள்ள நகர்ப்புறங்களுக்கு அப்பால் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதில் வவுனியா, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வளாகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மற்றும் சபரகமுவ பல்கலைக்கழகம் ஆகியவை அடங்குகின்றன.
மாணவர் தங்குமிட வசதிகள் தொடர்பான தேசிய கொள்கையொன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தக் கொள்கையில் தனியார் மாணவர் விடுதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.
இதுவரை தனியார் மாணவர் விடுதிகளுக்கான கட்டணங்கள் அல்லது குறைந்தபட்ச தரநிலைகள் தொடர்பில் முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாத நிலையில், புதிய கொள்கையின் மூலம் சுகாதாரம், பாதுகாப்பு, அணுகல் வசதி, கட்டுப்படியான கட்டணம் மற்றும் மாணவர் நலன் உள்ளிட்ட விடயங்களுக்கான தரநிலைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், தனியார் விடுதிகளை கண்காணிப்பதற்கும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், விதிமுறைகளைப் பின்பற்றாத விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.
நியாயமான, வெளிப்படையான, பாதுகாப்பான, கட்டுப்படியான, அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தங்குமிட வசதிகளை உறுதி செய்வதே இந்தக் கொள்கையின் நோக்கம் என பிரதமர் தெரிவித்தார்.
மேலும், கூடுதல் மாணவர் விடுதிகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் காணிகளை வழங்கும் வகையில், அரச–தனியார் கூட்டாண்மை முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனுடன், தொழிற்பயிற்சி நிலையங்கள், இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் மற்றும் தொழிற்கல்வி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள விடுதி வசதிகள் மற்றும் மாணவர் நலன்புரி நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.









