இலங்கை நுகர்வோர் அதிகாரசபையினால் (CAA) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், 54 விற்பனை நிலையங்களில் எடைக்குறைவான பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், செப்டெம்பர் 1 முதல் 3ஆம் திகதி வரை சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட 118 விற்பனை நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாணின் எடை குறித்த தகவல்கள் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனை நிலையங்களில் 54 இடங்களில் எடைக்குறைவான பாண் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 76 கடைகள் மற்றும் பேக்கரிகளில் பாணின் எடை முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதுடன், 65 கடைகள் மற்றும் பேக்கரிகளில் பாணின் விலை முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எடைக்குறைவான பாணை உற்பத்தி செய்த அல்லது விநியோகித்த பேக்கரிகளை அடையாளம் காணும் வகையில், சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அப்பால் விநியோகச் சங்கிலி தொடர்பான விசாரணைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக 81 பேக்கரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எடைக்குறைவான பாண் உற்பத்தி செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு, தங்களது உற்பத்தி நடவடிக்கைகளை உடனடியாகச் சீரமைத்து, சந்தைக்கு விநியோகிக்கப்படும் பாண் நிர்ணயிக்கப்பட்ட எடையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, முழுமையான ஒரு பாணின் எடை 450 கிராமாகவும், அரைப் பாணின் எடை 225 கிராமாகவும் இருக்க வேண்டும்.
நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள், பேக்கரி பரிசோதனைகள் மற்றும் விநியோகச் சங்கிலி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாணின் எடை, விலை அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தெரிவிக்க முடியும்.











