காசநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்திய சுகாதார அமைச்சர்களுக்கு இடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக கிழக்கு திமோர் நாட்டின் டிலி நகருக்குச் சென்றிருந்த இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,இன்று செவ்வாய்க்கிழமை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்தார்.
இதன்போது, இலங்கை எதிர்கொண்ட கடினமான காலகட்டங்களில் இந்தியா வழங்கிய உதவி மற்றும் நட்புறவுக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். குறிப்பாக, காசநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா உறுதியளித்தார்.
இலங்கையின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு வலையமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் குறிப்பாக கிராமப்புற மட்டத்தில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கிராமப்புற மக்களின் சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் முக்கியமானது என இரு தரப்பினரும் இணங்கினர்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்ட இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.









