முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு தனது அறிக்கையில் முன்வைத்திருந்த கவலைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பியதற்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதிலளித்துள்ளார்.
எனினும், ஸ்டீவன் திருவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நடைமுறை நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தொடர்பான தனிப்பட்ட கவலைகளுக்கு அமைச்சர் நேரடியாக பதிலளிக்கவில்லை.
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய செயலகத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைந்த அமைப்பு அல்ல எனத் தெரிவித்த அமைச்சர், அது உறுப்பினர் அடிப்படையில் இயங்கும் தனியார் அமைப்பு எனக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அந்த அமைப்பு “மோசமான அமைப்பு” என தான் கூறவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், அது ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் ஏற்றுக்கொண்டார்.
ஸ்டீவன் திரு தன்னை சந்திக்க கோரியிருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் இலங்கை பிரதிநிதியான உபுல் ஜயசூரிய சந்திப்பொன்றைக் கோரியிருந்ததாகவும், அதற்கு தான் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் கூறினார்.
எனினும், முன்மொழியப்பட்ட சந்திப்பு தினத்தில் தான் கொழும்புக்கு வெளியே இருந்ததால் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, நடைமுறை நியாயத்தன்மை, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் 22ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் கையாளப்பட்ட விதம் குறித்து ஸ்டீவன் திரு எழுப்பியிருந்த கவலைகளை சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான கருத்துக்கள் சர்வதேச நம்பிக்கையையும் வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.









