கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவரின் மனைவியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான உயிரிழந்தவரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









