இலங்கை ரயில்வே திணைக்களம், பணிநேரத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் தடை விதித்து விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பணியில் இருக்கும் சில ஊழியர்கள் ரயில்வே நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் ரயில்வே சேவைகளின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கத்தை கடுமையாக பாதிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய சுற்றறிக்கையின் படி, ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர், உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே ரயில்வே தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வெளிப்புற தரப்பினருக்கோ ஊடகங்களுக்கோ வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே பொது முகாமையாளரால் கையொப்பமிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையை மீறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











