நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 84,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26,457 குடும்பங்களின் 84,545 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 5 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 24,144 குடும்பங்களின் 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என கடமையிலுள்ள வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வினாடிக்கு 20 கனமீற்றர் நீர் குடா கங்கைக்கு திறந்து விடப்படுவதாக குக்குலே கங்கை நீர்மின் உற்பத்தி நிலைய நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.









