இலங்கையில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இடம்பெற்ற இன மோதல்களால் இலங்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தற்போது வாழும் அனைவரும் அந்த கொடூரமான மற்றும் அழிவுகரமான அனுபவங்களின் தாக்கத்தை எதிர்கொண்டவர்களாக உள்ளனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனவே, எதிர்காலத்தில் மீண்டும் எந்தவொரு இன மோதலும் உருவாகுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் உறுதியளித்தார்.
கடந்த காலங்களில் செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் சட்டம் வெவ்வேறு விதமாக அமுல்படுத்தப்பட்டதாக சமூகத்தில் கருத்து நிலவியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், நாட்டைக் கட்டியெழுப்புவதன் முக்கிய அடிப்படையாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், அரசாங்கத்துடனான முக்கிய கொடுக்கல் வாங்கல்களை வீட்டிலிருந்தபடியே இணையவழியில் மேற்கொள்ளக்கூடிய வகையில் புதிய அமைப்பொன்றை அறிமுகப்படுத்தி, அரச சேவையை மேலும் கவர்ச்சிகரமான தொழில்துறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தாமும் அரசாங்கமும் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தினாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்த அவர், எதிர்வரும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாட்டின் மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை துரிதப்படுத்தி, சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
தீர்மானங்களை எடுக்கும் போது சாத்தியமான அனைத்து கோணங்களிலும் அவை ஆராயப்படுவதாகவும், இதனால் சிறிய அளவிலான முரண்பாடுகள் ஏற்பட்டாலும், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் கைவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.









