குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியம் புலமைப்பரிசில் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது நிகழ்வு வடமத்திய மாகாணத்தில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அனுராதபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரொஷான் கமகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
லொத்தர் விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்கு வழங்கப்படும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் கீழ் தரம் 1 முதல் க.பொ.த. உயர்தர வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இந்தத் திட்டம் அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் தேவையுள்ள மக்களுக்கு நலன்களையும் உதவிகளையும் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
50 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஜனாதிபதி நிதியம், கடந்த ஆண்டு முதல் உண்மையான மக்கள் நிதியமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதுடன், ஜனாதிபதி நிதியத்துக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பை அங்கீகரிப்பதும் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் நோக்கமாகும்.









