இலங்கையின் ரயில்வே சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய ரயில்கள் மற்றும் என்ஜின்களை கொள்வனவு செய்வதுடன், ரயில் பாதையின் சில பகுதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு நாட்டின் ஒட்டுமொத்த ரயில்வே வலையமைப்பின் நீளத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர், ஏற்கனவே உள்ள ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் கீழ், பொல்கஹவெல – குருநாகல் ரயில் பாதைப் பகுதியை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய 5 ரயில் பெட்டித் தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கேள்விப்பத்திர மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கொள்வனவுக்கான ஒப்பந்தத்தை 2026ஆம் ஆண்டுக்குள் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், மேலும் 5 ரயில் பெட்டித் தொகுதிகளை கொள்வனவு செய்வதற்காக 2027ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறுகிய தூர சேவைகளில் இயக்கக்கூடிய இரு திசைகளிலும் இயங்கும் ரயில்களை கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையிலேயே 3 இலகுரக ரயில் பெட்டித் தொகுதிகளை உள்நாட்டில் ஒன்றிணைக்கும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதுடன், தற்போது அவை மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர், இந்த கொள்வனவு நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இலங்கை ரயில்வேயின் ரயில் தொகையை அதிகரித்து, பயணிகள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








