இந்த மாதம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய பிரதமர், ஆகஸ்ட் 19ஆம் திகதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என தெரிவித்த கருத்தை மறுத்தார்.
“ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. திட்டமிட்டபடி உரிய நேரத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்” என பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலை அதிபர்களை நியமிக்கும் போது அடிப்படைக் கல்வித் தகைமைகளுக்கு மேலதிகமாக வேறு காரணிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றனவா என நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தற்போதைய அதிபர் நியமன முறையை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நீண்ட காலமாக அதிபர் நியமனங்கள் முறையான கட்டமைப்பின் அடிப்படையில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நடைமுறையை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்காக அரச சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்புகளின் மனிதவள முகாமைத்துவப் பிரிவின் கீழ், தற்போதுள்ள முறைமை மற்றும் அது தொடர்பான சுற்றறிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
அதிபர்களைத் தெரிவு செய்வது கல்வித் தகைமைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும், செயல்திறன் உள்ளிட்ட ஏனைய காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்களின் திறன்களை மேம்படுத்த கல்வி அமைச்சு ஏற்கனவே பல பயிற்சி நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், 2027ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக மிகவும் கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் திறன்களை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.









