அரச வைத்தியசாலைகளில் Filgrastim ஊசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இந்த உடனடி தட்டுப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை இன்று (20) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பினார்.
கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் Filgrastim ஊசிகளுக்கு மகரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
இதனால் நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் ஒரு Filgrastim ஊசியை 17,000 முதல் 23,000 ரூபாய் வரை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் Neupogen ஊசிகள் 20,000 முதல் 30,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜூலை மாதம் முதல் வைத்தியசாலைகளில் இந்த ஊசிக்கு தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொண்டார். பிரச்சினைக்கு தீர்வு காண விசேட மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
300 மைக்ரோகிராம் அளவிலான இந்த ஊசியின் வருடாந்த தேவையானது சுமார் 300,000 ஊசிகள் எனவும், நாளாந்த தேவை சுமார் 900 எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மகரகம அபேக்ஷா வைத்தியசாலையின் மாதாந்த தேவையானது சுமார் 9,750 ஊசிகள் எனவும், நாளாந்த தேவை சுமார் 325 எனவும் அவர் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டுக்கான 310,000 குப்பிகளுக்கான (vials) கொள்வனவு ஆணை 2025 ஜனவரியிலும், 2027ஆம் ஆண்டுக்கான கொள்வனவு ஆணை 2025 டிசம்பரிலும் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான கொள்வனவு ஆணையின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு மே மாதம் சீனாவிலிருந்து 160,000 குப்பிகள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) விதிமுறைகளுக்கு அமைவாக ஊசிகளின் மீது முறையான அடையாளப் பெயரிடல் இடம்பெறவில்லை என அமைச்சர் தெரிவித்தார். அட்டைப் பொதியில் மாத்திரமே பெயரிடல் இடம்பெற்றிருந்ததாகவும், இது NMRA விதித்த கொள்வனவு விதிமுறைகளில் ஏற்பட்ட முக்கிய விலகல் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உடனடி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக விமான சரக்கு மூலம் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒரு வாரத்துக்குள் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வழமையான கொள்வனவு நடைமுறையின் ஊடாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ள குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் ஆகலாம் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே, எதிர்காலத்தில் இவ்வாறான தட்டுப்பாடுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அரச வைத்தியசாலைகளில் Filgrastim கையிருப்பை தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், நீண்டகால கொள்வனவு பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.









