நாட்டில் சுமார் 6 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான அல்லது பகுதியளவான நிரந்தர வீடுகள் இல்லை என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
‘குடியிருப்புக் கனவும் மக்களின் எதிர்பார்ப்புகளும்’ என்ற தலைப்பில் இன்று (30) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024 டிசம்பர் மாதத் தரவுகளின்படி, நாட்டில் 61 இலட்சம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சுமார் 60 இலட்சம் வீடமைப்பு அலகுகளே உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சில குடும்பங்களுக்கு தலா இரண்டு வீடுகள் காணப்பட்டாலும், அவற்றில் சில வீடுகள் வாழ்வதற்கு உகந்த நிலையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வாக அரசாங்கத்தினால் 31,000 வீடுகளை உள்ளடக்கிய விசேட வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 19,000 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவோ அல்லது தற்போதுள்ள வீடுகள் புனரமைக்கப்படவோ உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் சுமார் 12,000 வீடுகள் அரசாங்கத்தின் முழுமையான உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், எஞ்சிய வீடுகளுக்கு கடன் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சுமார் 20,000 வீடுகளின் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் வீடமைப்புக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரண வீடமைப்புக் கடன்களை வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களைத் தவிர்த்தே 31,000 வீடுகள் கொண்ட விசேட திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஒக்டோபர் 5ஆம் திகதி 5,000க்கும் மேற்பட்ட வீடுகளை திறந்து வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








