எயார்பஸ் விவகாரம் தொடர்பில் பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 3 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை நடைமுறைப்படுத்தும் வகையில், குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது அவர்களை பாதிக்கும் வகையில் செயற்படவோ கூடாது எனவும் சந்தேகநபருக்கு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.








