2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ ஹஜ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, 2027ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு 3,500 யாத்திரிகர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமை (09) ஜித்தாவில் நடைபெற்ற வருடாந்த ஹஜ் கண்காட்சி மற்றும் மாநாட்டையொட்டி கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை சார்பில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பரும், சவூதி அரேபியா சார்பில் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல் ஃபத்தாஹ் பின் சுலைமான் மஷாத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின்போது, ஹஜ் யாத்திரிகர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் யாத்திரை நடைமுறைகளை இலகுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இலங்கைத் தரப்பினர் வலியுறுத்தினர்.
அத்துடன், 2027ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தலைமையிலான குழுவினர் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்பீக் ஃபவ்ஸான் அல் ரபீஆவையும் சந்தித்தனர்.
இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலர், ஜித்தாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் நீதியரசர் எம்.டி. மொஹமட் லஃபார், ஹஜ் மற்றும் உம்ரா குழு உறுப்பினர் ருஷ்தி காலித் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளும் இலங்கைத் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவினரும் சவூதி அரேபிய அமைச்சினால் நடத்தப்பட்ட விசேட பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றனர்.
ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளின் செயற்பாட்டுத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன








