2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான வங்கியியல் சேவைகளை வழங்கும் வங்கிப் பங்காளராக அமானா வங்கி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான வங்கியியல் ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகர்களுக்கான வங்கியியல் சேவைகளை வழங்குவதற்கு அமானா வங்கியை முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மீண்டும் தெரிவு செய்துள்ளது.
போட்டித்தன்மை மிக்க தெரிவு செயல்முறையைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், ஹஜ் சுற்றுலா அமைப்பாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய, பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் தடையற்ற வங்கியியல் தீர்வுகளை வழங்குவதில் அமானா வங்கியின் ஆற்றல் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை இந்த நியமனம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, எதிர்பார்க்கப்படும் ஹஜ் யாத்திரிகர்களுக்காக ‘சிறப்பு ஹஜ் கணக்குகளை’ ஆரம்பித்து நிர்வகிப்பதற்கான வசதிகளை அமானா வங்கி ஏற்படுத்தவுள்ளது.
இதன் மூலம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் கட்டாய ஹஜ் தொடர்பான கொடுப்பனவுகளை நிறைவு செய்ய முடியும்.
நல்ஆளுமை, வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் மேம்படுத்தப்பட்ட ஹஜ் நிர்வாகக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த சிறப்பு ஹஜ் கணக்கு அமைகிறது.
ஹஜ் யாத்திரைக்குத் தெரிவு செய்யப்படக்கூடிய யாத்திரிகர்கள், பாதுகாப்பான ஒப்பந்த ஏற்பாட்டின் மூலம் தங்களுக்கான கட்டாய முன்பணங்களை இலகுவாகச் செலுத்துவதற்கும் இந்தக் கணக்கு வசதியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழுச் செயல்முறையிலும் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதுடன், யாத்திரிகர்கள் தங்களது புனிதப் பயணத்திற்காகக் காத்திருக்கும் காலப்பகுதியில் அதிக இலாபத்தை ஈட்டும் வகையில் அதிக இலாபப் பகிர்வு விகிதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், யாத்திரிகர்களுக்கு அமானா வங்கி பல்வேறு பிரத்தியேக சலுகைகளையும் வழங்கவுள்ளது.
இதில் யாத்திரிகர்களுக்கு பயனுள்ள பயண உபகரணங்கள், முன்னுரிமை அடிப்படையில் சவுதி ரியால் கொள்வனவு செய்வதற்கான சிறப்பு நாணயமாற்று வீதங்கள் மற்றும் ஹஜ் யாத்திரையின்போது சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் டெபிட் அட்டை கொள்வனவுகளுக்கு 10 சதவீத Cashback உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
இந்நியமனம் தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஹஜ் யாத்திரைக்காக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நம்பிக்கையை வென்ற வங்கிப் பங்காளராக அமானா வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம்.
அமானா வங்கியின் நிறுவனப் பங்குதாரர்களின் ஊடாக மலேசியா போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், நல்ஆளுமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் உச்சகட்ட நிலையைப் பேணுவதுடன், பாதுகாப்பான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்குகிறோம்” என்றார்.
இதேவேளை, இந்தப் பங்காண்மை தொடர்பில் DMRCA சுயாதீன ஹஜ் செயற்குழுவின் தவிசாளர் ரியாஸ் மிஹுலர் கருத்துத் தெரிவிக்கையில்,
“போட்டித்தன்மைமிக்க ஏலச் செயல்முறையைத் தொடர்ந்து, 2027 ஹஜ் யாத்திரைக்கான எமது வங்கிப் பங்காளராக அமானா வங்கியை மீண்டும் தெரிவு செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
ஹஜ் தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகளின் நிர்வாகத்தில் நல்ஆளுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலுப்படுத்தும் திணைக்களத்தின் நோக்கத்திற்கு ஆதரவளிப்பதில் வங்கி உயர்ந்த அளவிலான தொழில்முறை, வினைத்திறன் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர்ச்சியான பங்காண்மை பாதுகாப்பான மற்றும் சீராக நிர்வகிக்கப்படும் கட்டணச் செயல்முறையை உறுதி செய்வதுடன், எதிர்பார்க்கப்படும் யாத்திரிகர்களுக்கான அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி செயற்பட்டு வருகின்றது.
ஜித்தாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் IsDB Group, அமானா வங்கியின் பிரதான பங்காளராக திகழ்கின்றது.
IsDB Group, ‘AAA’ தரப்படுத்தலைக் கொண்ட பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவை நிறுவனமாக இருப்பதுடன், 57 நாடுகளை அங்கத்துவமாகக் கொண்டுள்ளது.
வட்டிசாராத வங்கியியல் மாதிரியைப் பின்பற்றும் அமானா வங்கி, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக Asian Banker அமைப்பினால் தரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமானா வங்கி எவ்வித துணை அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்களுக்கான காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராகவும் தனது சமூகப் பங்களிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.







