இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான தீர்மானமிக்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பட்லருக்கு தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அவருக்குப் பதிலாக டேன் லோரன்ஸ் (Dan Lawrence) இங்கிலாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
லோரன்ஸ், சொமர்செட் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிக்கான சர்ரே அணியில் இடம்பெற்றிருந்தார். எனினும், தற்போது அந்த அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (26) நடைபெறும் இங்கிலாந்து அணியின் பயிற்சியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன.
இதனால், நாளை நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.








