விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 08.05.2024 முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
2023 டிசம்பர் 2 ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகஸ்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அடையாளமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
அஸ்வெசும, உறுமய போன்ற வேலைத் திட்டங்கள் குறித்து புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் இந்த திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், தமது பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த வேலைத் திட்டங்களில் இணைந்து தீவிரமாக செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.