சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த போட்டிப் பொருளாதாரம் மட்டுமன்றி, 2050 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய உமிழ்வை அடையும் பசுமைப் பொருளாதாரமாக மாற்றியமைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பமானது எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தைத் தணிக்க உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் 07.05.2024 ஆரம்பமான இலங்கை காலநிலை மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் முதன்முறையாக “எங்கள் கிரகத்திற்கும் எமது நாட்டுக்குமான காலநிலை நடவடிக்கை” (Climate Action for our Nation and the Planet)” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை காலநிலை மாற்ற மாநாடு நேற்று ஆரம்பமானதோடு மாநாடு மே 09 வரை நடைபெறவுள்ளது.
உலகளாவிய மற்றும் தேசிய கண்ணோட்டத்துடன் காலநிலை மாற்ற நெருக்கடியின் பல்வேறு அம்சங்களை ஆழமாகப் புரிந்துகொள்வது மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளை ஆராய்வதே இந்த காலநிலை மாநாட்டின் நோக்கமாகும்.
மாநாட்டில் குறைந்த உமிழ்வு மற்றும் காலநிலை – எதிர்ப்பு பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு செய்ய வேண்டிய கொள்கை மாற்றங்கள் குறித்து ஆராயப்படும்.
இலங்கையிலும் காலநிலை மாற்றம் தொடர்பான மையம் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான சட்டங்களை வகுப்பதில் உலக நிதி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் காலநிலை மாற்றச் சட்டத்தை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இந்துசமுத்திரம் மற்றும் வெப்பமண்டலப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் வகிபாகம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் இலங்கையின் தலையீடு ஆகியவற்றை விளக்கிய ஜனாதிபதி, இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளையும் விளக்கினார்.