பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய கட்டுமானங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் 08.05.2024 நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
மூன்று கட்டங்களில் கீழ் பிங்கிரிய தொழில் வலயத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதல்கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் ஜூன் மாதம் அந்த பணிகளை மேற்பார்வைச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எஸ். எச். சமரதுங்க, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். நஜூமுதீன், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரும் கலந்துகொண்டனர்.