ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பலொன்று வெடிபொருட்கள் மூலம் தாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் (UKMTO) தெரிவித்துள்ளது.
எனினும், கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஓமானின் கசாப் (Khasab) நகருக்கு வடகிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய கப்பல் தொடர்பாக முன்னதாக வெளியிடப்பட்ட எச்சரிக்கையைப் புதுப்பித்து UKMTO இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்போது, சிறிய படகொன்று குறித்த எண்ணெய் கப்பலின் இடதுபுறமாக அணுகி, நீர்மட்டத்திற்கு மேலே கப்பலின் வெளிப்புறத்தில் இரண்டு வெடிபொருட்களைப் பொருத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்புகளால் கப்பலின் இயந்திர அறையில் தீப்பரவல் ஏற்பட்டதுடன், தற்காலிகமாக கப்பலின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.எனினும், கப்பல் பணியாளர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, கப்பல் மீண்டும் தனது அடுத்த துறைமுகத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என UKMTO தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, குறித்த கடற்பகுதியைக் கடந்து செல்லும் ஏனைய கப்பல்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.








