ஹம்பாந்தோட்டைக்கு அப்பால் சுமார் 12 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளான சைப்ரஸ் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்று பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு இழுத்துவரப்பட்டுள்ளது.
159.99 மீற்றர் நீளமுடைய MV AAL Gibraltar என்ற குறித்த கப்பலில் சுமார் 23,000 மெற்றிக் தொன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன.
நான்கு மீட்புப் படகுகளின் உதவியுடன் குறித்த கப்பல் துறைமுகத்திற்கு இழுத்துவரப்பட்டுள்ளது.
வணிகக் கப்பல் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம், கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் துறைமுகத் தலைவர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கப்பலின் திருத்தப் பணிகளுக்கு உதவும் வகையில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட தேவையான வசதிகளை வழங்கியுள்ளது.தற்போது குறித்த கப்பலின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








