பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்கள் என்ற போர்வையில் 2,500 இற்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாவை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தின் மற்றுமொரு பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பணியகத்தினால் (CCIB) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Limo Plus International (Pvt) Ltd மற்றும் Limo International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களுடன் தொடர்புடைய மேலும் இரு பணிப்பாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








