2016 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள 1,040 மில்லியன் ரூபா பெறுமதியான பெறுமதி சேர் வரியை (VAT) விரைவில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது.
குறித்த வரி நிலுவையை அறவிடக் கோரி உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் கொழும்பு மாநகர சபைக்கு எதிராகத் தாக்கல் செய்த முறைப்பாடு, கடந்த நவம்பர் 25ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகார மஹராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு வரிக் கொடுப்பனவுகள் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாக மாநகர சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மேலும், குறித்த வரி நிலுவையைச் செலுத்துவதற்கு மாநகர நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும், முறைப்பாட்டாளருடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா, செலுத்தப்படாத வரித் தொகையை அறவிடுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.
இவ்வழக்கில் கொழும்பு மாநகர சபையின் கணக்காளர் சுகத் தர்மசூரிய நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து, அவரை 10 இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், அவரை பணியிட மாற்றம் செய்வதற்கோ அல்லது வெளிநாடு செல்வதற்கோ முன்னதாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
வரி நிலுவையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், எட்டப்படும் இணக்கப்பாடு தொடர்பான விபரங்களை எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தினார்.








