பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், தனது வளைகுடா பிராந்திய சுற்றுப்பயணத்தின் எதிர்பாராத இறுதிப் பயணமாக சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைச் சென்றடைந்துள்ளார்.
சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் பல வாரங்களாகத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த விஜயம் திடீரெனத் திட்டமிடப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு விஜயம் செய்யும் முதலாவது மேற்கத்திய நாட்டுத் தலைவர் மக்ரோன் ஆவார்.
கட்டாரிலிருந்து சவூதி அரேபியாவுக்குப் பயணித்துள்ள மக்ரோன், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கான விஜயங்களைத் தொடர்ந்து தனது வளைகுடா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கின்றார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, வளைகுடா நாடுகளுடனான மூலோபாயக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அத்துடன், வளைகுடா நாடுகளிடமிருந்து மேலதிக எரிசக்தி விநியோகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உறுதிமொழிகளையும் பெற்றுள்ளதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானையும் மக்ரோன் சந்திக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
“ஹூதி கிளர்ச்சியாளர்களால் சவூதி அரேபியப் பிரதேசத்தின் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு மத்தியில், அந்நாட்டுக்கு பிரான்ஸ் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதும், ஹைட்ரோகார்பன் எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாத்து, அதன் மூலங்களைப் பல்வகைப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்வதுமே இந்த விஜயத்தின் நோக்கமாகும்” என ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.








