கோதுமை மாவின் விலை எவ்வித முன் அறிவித்தலுமின்றி அல்லது இணக்கப்பாடின்றி 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளது.
ஊடகச் செய்திகளின் ஊடாகவே கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிந்துகொண்டதாகவும், கோதுமை மா உற்பத்தியாளர்கள் எவரும் உத்தியோகபூர்வமாகத் தமக்கு அறிவிக்கவில்லை என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உற்பத்தியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்தல் விடுத்துள்ள அதிகாரசபை, விலை அதிகரிப்புக்கான காரணம் மற்றும் விலைத் திருத்தம் தொடர்பான விபரங்களை விளக்குமாறு கோரியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கோதுமை மா, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் விலையை அதிகரிப்பதற்கு முன்னர் உற்பத்தியாளர்கள் அதிகாரசபையுடன் கலந்தாலோசித்து இணக்கப்பாட்டுக்கு வருவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தை மீறி அதிகரிக்கப்பட்ட விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் பதில்களை ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.








