வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், அப்பகுதியில் நீர் விநியோகத்தை நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தினமும் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக சபையின் தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமைபோன்று இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் கனமீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 23 முதல் 24 சதவீதமான நீர் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுவதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 65 சதவீதமான நீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாகவும், இதில் சுமார் 6 இலட்சம் கனமீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெறப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்தே கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களே ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளில் நீர் ஆதாரங்களில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.









