யெமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் வளாகத்தை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அராம்கோவை இலக்காகக் கொண்டு “பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களுடன் இராணுவ நடவடிக்கை” முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
தாக்குதல்கள் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், இதனால் குறித்த பகுதியில் தீ ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சவுதி அதிகாரிகள் இதுவரை தாக்குதல் குறித்து உறுதிப்படுத்தவில்லை. அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனமும் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சனிக்கிழமை ரியாத்தில் உள்ள அராம்கோ வளாகத்திற்கு அருகில் இருந்து தீ மற்றும் அடர்த்தியான புகை எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சவுதி தலைமையிலான கூட்டணி படைகள், யெமனின் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கு ஆதரவாக, ஹூதிகளின் வலுவூட்டல் நிலைகளை இலக்காகக் கொண்டு 97 துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கி சுடும் படையினர் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமன் அரசாங்கப் படைகளின் பேச்சாளர் கர்னல் மஜீத் அப்துல்லா அல்-நசீலி, குறைந்தது 260 ஹூதி போராளிகள் இலக்கு வைக்கப்பட்டதுடன், 44 இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியிலும், சவுதியின் செங்கடல் கரையோர நகரமான யன்புவில் உள்ள அராம்கோ வளாகங்களைத் தாக்கியதாக ஹூதிகள் தெரிவித்திருந்தனர். அதன்போது, தைஃப் மற்றும் யன்பு நோக்கி ஏவப்பட்ட ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக சவுதி தெரிவித்திருந்தது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ஜூலை மாதம் முறிவடைந்ததைத் தொடர்ந்து யெமனில் மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான பாப் அல்-மந்தப் நீரிணைக்கு அருகிலுள்ள மொக்கா துறைமுக நகரம் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளை ஹூதிகள் கைப்பற்றியிருந்தனர்.
மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்ததில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
யெமனில் 2014ஆம் ஆண்டு ஹூதிகள் தலைநகர் சனாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.
மூலம்: அல் ஜசீரா







