முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று (30) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நீதிமன்றக் கடமையொன்றுக்காக வருகை தந்திருந்த ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து வெளியேறியபோது அவருக்கு அருகில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு போதுமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே சம்பவத்துக்கு காரணமா என்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் மத்தியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், ஒளிப்பதிவாளர் மூலம் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்த முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








