ஹூதி போராளிகளுடன் இடம்பெற்ற மோதல்களுக்குப் பின்னர், தைஸ் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மொக்கா நகரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக யெமனின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசுக்கு ஆதரவான சபா செய்தி நிறுவனம், இராணுவத் தரப்பை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனாவை நோக்கி “மூலோபாய தாக்குதலை” ஆரம்பித்துள்ளதாகவும் யெமன் அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயற்படும் யெமன் அரசுப் படைகள், தைஸ் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள துபாப் மாவட்டத்தையும், பாப் அல்-மந்தப் நீரிணையைச் சுற்றியுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் ஹூதிகளுடனான மோதல்களுக்குப் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளன.
இதனிடையே, அமெரிக்காவுடனான மோதலுக்கு “இராணுவத் தீர்வு இல்லை” என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக தம்மைத் தற்காத்துக்கொள்ள ஈரான் தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.








