கண்டி எசல பெரஹெராவில் பங்கேற்கும் யானைகள் மீது லேசர் பாய்ச்சுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்கே தெரிவித்துள்ளார்.
பெரஹெராவின் போது யானைகளை அச்சுறுத்தும் வகையிலான அதிக சத்தமுள்ள கொம்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதற்கும், அவற்றை ஊர்வலப் பாதைக்கு கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பக்தர்கள் பயன்படுத்தும் நடைபாதைகளை மறிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்க அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புனித தந்த தாது மற்றும் நான்கு மகா தேவர்களை கௌரவிக்கும் இந்த மத ஊர்வலத்தை மக்கள் கேளிக்கை நிகழ்வாகக் கருத வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஊர்வலம் நடைபெறும் போது ஆரவாரம் செய்வதையும் விசில் அடிப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.
கடந்த ஆண்டு சில போதைப்பொருள் பாவனையாளர்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக நடித்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருக்கைகளை வழங்குவதாகக் கூறி அதிகளவில் பணம் வசூலித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பெரஹெராவை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு மேலதிக பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.









