மீலாதுன் நபியை முன்னிட்டு, இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் முனீர் முலாஃபர் தெரிவித்துள்ளார்.
அன்பிற்குரிய நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் புனித பிறப்பை நினைவுகூரும் ஈதுல் மீலாதுன் நபி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களால் ஆழ்ந்த பக்தியுடனும் மரியாதையுடனும் அனுஷ்டிக்கப்படும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இந்நாள் வெறுமனே ஒரு சமயக் கொண்டாட்டமாக மட்டுமன்றி, கருணை, இரக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தால் அழியாத போதனைகளை நினைவுகூரும் சந்தர்ப்பமாகவும் அமைகிறது.
வேற்றுமையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதும், அனைத்து சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்தை வளர்ப்பதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும். குறிப்பாக பல மதங்களையும் கலாசாரங்களையும் கொண்ட இலங்கை போன்ற நாட்டில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையும் போதனைகளும் அமைதியான சகவாழ்வையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த ஆண்டு ஈதுல் மீலாதுன் நபி அனுஷ்டிப்பு வெறுமனே ஒரு சமய நிகழ்வாக மட்டுப்படுத்தப்படாமல், ஒருவருக்கொருவர் கருணை, மரியாதை மற்றும் சகோதரத்துவத்தை வளர்த்து, அமைதியானதும் ஒன்றுபட்டதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது உறுதிப்பாட்டை புதுப்பிக்கும் வாய்ப்பாக அமைய வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உன்னத போதனைகளும் முன்மாதிரியான வாழ்க்கையும் எமது வாழ்வில் ஒளியேற்றட்டும். அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சகோதரத்துவம் நிறைந்த புனிதமான ஈதுல் மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









