சிறையில் இருந்து முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கருத்தை மேற்கோள்காட்டிய SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, NPP நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிறையில் இருந்து நாமல் ராஜபக்ஷ அனுப்பியிருந்த செய்தி, சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் வாசிக்கப்பட்டது.
அதில், கஷ்டங்கள் சிலரை உடைத்துவிடும் அதேவேளை, மற்றவர்களை மேலும் வலிமையானவர்களாக மாற்றும் என நெல்சன் மண்டேலா தெரிவித்த கருத்து மேற்கோள்காட்டப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த நஜித் இந்திக, நாமல் ராஜபக்ஷவின் சிறைவாசத்தையும் நெல்சன் மண்டேலாவின் சிறைவாசத்தையும் ஒப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
“நெல்சன் மண்டேலாவை யார் மேற்கோள்காட்டுகிறார்? நாமல் ராஜபக்ஷ” எனக் குறிப்பிட்ட அவர், தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்காக மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டினார்.
நெல்சன் மண்டேலா அடக்குமுறை மற்றும் இனவெறி முறைக்கு எதிராகப் போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பின்னர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகி, நிறவெறி ஆட்சியிலிருந்து நாட்டை மாற்றியமைப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் நஜித் இந்திக தெரிவித்தார்.
இந்நிலையில், நாமல் ராஜபக்ஷவின் தந்தையும் மாமாவும் ஜனாதிபதிகளாக பதவி வகித்த காலப்பகுதியை குறிப்பிட்ட நஜித் இந்திக, ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சிப் பதிவையும் விமர்சித்ததுடன், தற்போதைய சூழ்நிலையில் மண்டேலாவின் பெயரை பயன்படுத்துவது மறைந்த தென்னாபிரிக்கத் தலைவருக்கு அநீதியானது எனவும் கூறினார்.
நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான அகல உடற்பருமன் கொண்ட விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பான நிதி பரிவர்த்தனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.
விமான கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய நிதியில் இருந்து, வர்த்தகர் ஒருவரின் ஊடாக நாமல் ராஜபக்ஷ 100 மில்லியன் ரூபாய் பெற்றதாக CIABOC குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
நஜித் இந்திக NPP தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்றத்தின் ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.







