புகையிரத திணைக்களத்திடம் 98 புகையிரத என்ஜின்கள் காணப்படுகின்ற போதிலும், தற்போது 50 என்ஜின்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத சேவைகளை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்வதற்கு 74 என்ஜின்கள் தேவைப்படுவதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் 53 புகையிரத என்ஜின்கள் இயங்கும் நிலையில் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அலுவலக புகையிரத சேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படும் புகையிரத வேகத் தொகுதிகளில் தற்போது 118 தொகுதிகள் மாத்திரமே சேவையில் உள்ளன.
மொத்தமாக 242 வேகத் தொகுதிகள் காணப்படுகின்ற நிலையில், புகையிரத சேவைகளை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்ல 193 தொகுதிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் 258 வேகத் தொகுதிகள் இருந்த போதிலும், அவற்றில் 148 தொகுதிகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிரத என்ஜின்கள் மற்றும் வேகத் தொகுதிகளின் பற்றாக்குறை காரணமாக நாளாந்தம் பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும், என்ஜின்கள் மற்றும் வேகத் தொகுதிகளில் ஏற்படும் கோளாறுகளால் புகையிரத தாமதங்கள் அதிகரித்துள்ளதாகவும் புகையிரத தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பல தொழிற்சங்கங்கள் புகையிரத பொது முகாமையாளரிடம் தொடர்ச்சியாகத் தெளிவுபடுத்திய போதிலும், அவர் சாதகமான பதிலை வழங்கவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனையடுத்து, புகையிரத திணைக்களத்தில் தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினைகள் மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து எதிர்வரும் 17ஆம் திகதி 27 புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இதனிடையே, குறித்த பணிப்புறக்கணிப்புக்கு இலங்கை பாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர் உறுப்பினர்கள் ஒன்றியமும் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமது உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடலுக்கு கோரிக்கை விடுத்தபோதிலும், இதுவரை புகையிரத பொது முகாமையாளர் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் அனில் குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பணிப்புறக்கணிப்பில் தமது சங்கமும் இணைந்துகொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (14) நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போக்குவரத்து அமைச்சில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.








